Saturday, 26 July 2025

பசி தீர்ப்போம்

 சந்தை நாள் இன்று


மதிய சாப்பாடு, ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து கொண்டிருந்தேன். வரும் வழியில் சந்தை கூடிக் கொண்டு இருந்தது. மணியும், 2ஐ நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் சந்தை, களை கட்டத் தொடங்கி விடும், 


ஒரு பெரியவர், தின்பண்ட கடை வைத்து இருந்தார். மிச்சர், முறுக்கு, சீவல், சேவு, பூந்தி என பலவிதமான ஐட்டங்கள். எதை எடுத்தாலும் இருபது ரூபாய் மட்டுமே. 


இனிப்பு பூந்தி மிகவும் பிடிக்கும் என்பதால், ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன், நல்ல பசி, சாப்பாடை ஒரு பிடித்து விட்டு அமர்ந்தேன். 


கண் முன்னே இருந்த பூந்தி பாக்கெட், என்னை இழுத்தது. வயிறு நிரம்பி  இருந்தாலும், பூந்தியின் மீதிருந்த ஆர்வத்தால் பாக்கெட்டைக் கிழித்து சாப்பிட ஆரம்பித்து விட்டேன். நாவில் பட்டதும் கரைய ஆரம்பித்தது. அடடா என்ன ஒரு சுவை? சில நேரங்களில் நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் தின்பண்டங்களை விட, சந்தையில் கிடைக்கும் பொருள்கள் விலை குறைவாக இருந்தாலும், தரமும் சுவையும் நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. 


அப்போது ஒரு பூந்தி, என் கை தவறி உருண்டு சென்று தரையில் விழுந்தது. எடுக்க எத்தனித்த நொடி, ஒரு எறும்பு அந்த பூந்தியை நெருங்கியது. சற்று பின் வாங்கி விட்டேன். அந்த எறும்பு, பூந்தியை ருசிக்க ஆரம்பித்து விட்டது. அப்படியே விட்டு விட்டேன், சாப்பிடட்டும் என்று. தூக்கி எறிய மனமில்லை. 


அப்பொழுது ஒரு விஷயம் தோன்றியது மனதில். எதையும் கொண்டு போகப் போவதில்லை. இருப்பதை அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து வாழ்வோம் பூமியில். 



ஒரு பூந்தி உருண்டைக்கு இவ்வளவு பில்டப்பா? என்று தோன்றலாம். அந்த எறும்புக்கு அது இரண்டு நாள் உணவு. 


கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில், நமக்கு எங்கிருந்தோ படியளக்கும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் அல்லது நமக்குக் கிடைத்திருக்கும் உணவை பிறருக்கும் பகிர்ந்தளித்து உண்போம்.


யாராவது உங்களிடத்தில் பசி என்று கையேந்தினால், சற்றும் யோசிக்காமல் அருகில் இருக்கும் ஓட்டலில் இருந்து ஒரு வேளை உணவை வாங்கிக் கொடுத்து விடுங்கள். 


நன்றி🙏💕🙏💕

ஏ. ஐ - Ai - வரமா?

 A.i... 


இன்று இந்த வார்த்தை, பலருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வார்த்தையாகவும், சிலருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் வார்த்தையாகவும் இருக்கும்.



ஏனென்றால், அறிவியலில் ஒரு மைல் கல்லாக கண்டுபிடிக்கப்பட்ட ஏ. ஐ, இன்று பல துறைகளிலும் கால் பதித்து வருகிறது. மனித இனத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து, உருவாக்கப்பட்ட இது, சிலரின் வாழ்வாதாரத்தை பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.


உதாரணம்: பல நாடுகளில், கணிசமான எண்ணிக்கையில் ஐ. டி துறையைச் சேர்ந்தவர்களின் வேலையைப் பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.


இது போல, வேறு சில துறைகளிலும் பலர் தங்களது வேலையை இழக்கக் காரணமாக இருக்கிறது.


2025- ஐ A.i ன், குழந்தைப் பருவம் போல சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் இந்த வருடம்தான், இது உலகெங்கும் பிரபலமடைந்து அதிகளவில் சாமானிய மக்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.


ஆனால், ஆரம்ப நிலையிலேயே பலரின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்ட இந்த குழந்தை, இன்னும் சில மாதங்களில், வருடங்களில் அசுர வளர்ச்சி அடைந்து மேல்மட்ட ஊழியர்களின் வேலை வாய்ப்பை உலகெங்கிலும் 70-80% பறித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதனால், பல பட்டப்படிப்புகள் பயனற்றுப் போக வாய்ப்பு உள்ளது. மேலும் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வேறு எதிர் விளைவுகள் ஏற்படலாம் மனித இனத்தில்.


ஒரு வேளை, இப்படி நடந்தால் என்ன செய்வது?


வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒருவன், தொழில் நுணுக்கங்களை, தன் முதலாளியிடமே  கற்றுக் கொண்டு, ஒரு கட்டத்தில் தனது முதலாளியின் கடைக்கு எதிரிலேயே கடை விரித்து, முதலாளியையே முடித்துக் கட்டினானாம். 

அந்தக் கதை போல நடந்தால் என்ன செய்வது? ஏனென்றால் இங்கே மனித இனம் தான் முதலாளி. A.i தான், வேலையாள். 


ஒரு வேளை, இது முதலாளியை மிஞ்சி விட நினைத்து விட்டால், அடுத்த நொடி நாம் எல்லோரும் அதற்கு அடிமையாகி விட வாய்ப்பு உள்ளது. அப்பொழுது உலகத்தை ஆளும் ஒரு வலுவான தலைவன், ஏ. ஐ ஆக இருக்கலாம்.


ஏனெனில் இன்று மனித இனம், இணையத்துடன் இணைந்த கம்ப்யூட்டரை நம்பித்தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனின் பேங்க் அக்கவுண்ட் முதல் ஆதாரத் தகவல்கள் வரை, நாடுகளின் பொருளாதாரத் தகவல்கள் முதல் இராணுவத் தகவல்கள் வரை இவற்றை நம்பித்தான் உள்ளோம். அவற்றை, ஒரு நொடியில் தனது சுய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் அறிவும் வல்லமையும், ஏ.ஐ க்கு உண்டு.


எனவே, உலகத் தலைவர்கள் ஒன்று கூடி, ஏ. ஐ யால் ஏற்படப்போகும் மாற்றங்களை ஆய்வு செய்து, தொழில் ரீதியாக மனிதர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்காத வகையில் வரன்முறைகளையும், சட்டங்களையும் உருவாக்கி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


 என்னைக் கேட்டால்,  மனித ஊழியர்களுக்கு மாற்றாக அவற்றை தொழில் ரீதியாக (மனித வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில்) ஒவ்வொரு துறையிலும், பயன்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி, தடை விதிக்க வேண்டும். 



இல்லையேல், 


ஐ ரோபட்  - வில் ஸ்மித்தும்


டெர்மினேட்டர் - அர்னால்டும்


டாக்டர் வசீகரனின்  ரஜினிகாந்த் (சிட்டி) - ம்


மனித குலத்திற்கு உதவிட வேண்டிய சூழல் ஏற்படலாம். 😂😂😂


#ஏஐ #சிட்டி #AI #robotics #jobopportunity #ending #JudgmentDay #terminator #iRobot #Endhiran #robo2.0

பணம் பத்தும் செய்யும்

 பணம் பத்தும் செய்யும்... 


நண்பர்களே, நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே உங்களை நிம்மதியாக வாழ வைக்கும். பிறர் உழைப்பில் வந்த பணம், உங்களுக்கு நிம்மதி தராது. 


ஏனென்றால், ஒவ்வொரு பணத்திலும் ஒருவரின் உழைப்பு, கர்மா, பாவ, புண்ணியம் அடங்கியுள்ளது. பெற்றோர்களே ஆனாலும், அவர்களின் பாவ புண்ணியம் அவர்களால் நமக்குத் தரப்படும் பணத்திலும், சொத்திலும் அடங்கும். 


அதை நாம் அனுபவிக்கும் போது, அவர்களின் கர்மபலன், நம்மையும் நமது வம்சத்தையும் வந்தடையும். 


பெற்றோர்கள், வாழும் வரை அவர்களின் சொத்தைப் பிரித்து வாங்காதீர்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்கள் சொத்துக்களைத் தந்த பிறகு, ஏதோ ஒரு சூழல் காரணமாக உங்கள் மூலம் அவர்கள் ஏதாவது மன வருத்தம் அடைய நேரிட்டால், அவர்கள் மனதில் தோன்றும் ஒரே விஷயம் "நாம் ஏமாந்து விட்டோம், நம் குழந்தை நம்மை ஏமாற்றி விட்டது, அவசரப்பட்டு சொத்துக்களை தந்தது தவறு" என்பதே அது. 


அந்த நிலையில் உங்களுக்கு, அவர்களிடம் இருந்து கிடைக்கப்போவது ஆசிர்வாதம் அல்ல, சாபமே😟. அதனால் உங்களுக்கு பாவச் சுமையே கர்மபலனாக கிடைக்கும். அது உங்களுடைய வாழ்வையும் வம்சத்தையும் பாதிக்கும். உங்கள் மனச்சாட்சி மூலம் நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடலாம். 


எனவே உங்கள் பெற்றோர் சொத்துக்களை தவிர்த்து உங்கள் சுய சம்பாத்தியத்தின் சொத்துக்களை மட்டுமே அனுபவிக்க முயலுங்கள். ஒரு வேளை பெற்றோர்களின் சொத்துக்களைப் பெற நேர்ந்தால், அவர்களின் இறப்பிற்குப் பிறகு (மட்டுமே) சமமாக பெற முயற்சி செய்யுங்கள்.அப்படி செய்தால், நிம்மதி இருக்கும். இல்லையேல், உங்கள் நிம்மதி தொலைந்து வேதனை நிறைந்த வாழ்க்கை வாழ வாய்ப்பு உள்ளது. 


பெற்றோர்களே, நீங்களும் வாழும் வரை உங்கள் சொத்துக்களை உங்கள் பிள்ளைகளுக்கு தானம் செய்து விட வேண்டாம். ஏதோ ஒரு சூழல் காரணமாக உங்கள் பிள்ளைகளின் நல்ல செயல் கூட உங்களுக்கு தவறாக தோன்றி விட்டால் அல்லது அவர்களால் உங்களை திருப்திப்படுத்த முடியாமல் போனால், உங்கள் அந்திம காலம் நரகமாக மாறிவிடலாம். மேலும் உங்கள் மன வேதனை, அவர்களுக்கு சாபமாக மாறலாம்... 


ஏனெனில் பணத்தின் முன், பந்தம், பாசம், உறவு, அன்பு அனைத்தும் அழிந்து போகும் கலியுகம் இது. 


பெற்றோர்களும் நம் பிள்ளை தானே என்று நினைப்பதில்லை, பிள்ளைகளும் நம் பெற்றோர்கள் தானே என்று நினைப்பது இல்லை. இருவரின் அன்பு மற்றும் பாசத்தை, பாசத்தின் உறவின் அளவை பணமே தீர்மானிக்கிறது.


பணப் பிரதான உலகம். 😏😏😏


ஒரு நண்பரின் புலம்பல் இந்த பதிவு.  

(அவரது பெற்றோர், அவருக்கு சொத்துக்களை வழங்கிய பிறகு, அந்த நண்பர் செய்த ஒரு செயல், அவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அவரிடமே, "நான் ஏமாந்து விட்டேன்" என்று முகத்தில் அடித்தால் போல் சொல்லி விட்டனர். சிறிது காலத்தில் இறந்தும் விட்டனர். இப்போது அந்த நண்பர் தனது நிம்மதியைத் தொலைத்து நரக வேதனையை அனுபவிக்கிறார்). 


#அன்பு #பணம் #money #parents